இரத்தக் கழிச்சல்

குழந்தைக்கு உடல் மிகவும் உஷ்ணமடைவதாலும் ஆகாரங்களில் சர்க்கரையும் மாவும் அதிகமாக உபயோகிப்பதனாலும், சீனி வெல்லப்பாகினால் தயாரிக்கப்படும் உணவுகளை அதிகமாக சாப்பிடுவதாலும், இரண்டாவது பற்கள் முளைக்கும் போது இந்த நோய் ஏற்படுகிறது.

சீதபேதியிலும் சிறுகுடல், பெருங்குடல் புண்பட்டு அடிக்கடி மலம் கழியும். மலத்துடன் இரத்தம்,சளி கலந்து வரும்.

முதலில் ஆசனவாயில் கடுப்புடன் மலம் உண்டாகும், பின்பு தொப்புளையும் அடி வயிற்றையும் பிசைந்து இரத்தமும், சளியும் கலந்து மலம் வரும். நாவில் வெண்ணிற மாவு படிந்திருக்கும்.

மருந்து

வெந்தயம் – 15 கிராம்
நெல்லிவற்றல் – 15 கிராம்
சுண்டைவற்றல் – 15 கிராம்
மாம்பருப்பு – 15 கிராம்
மாதுளம்பழத்தோல் – 15 கிராம்
கறிவேப்பிலை – 15 கிராம்
ஓமம் – 15 கிராம்

ஒன்று சேர்த்து உலர்த்தி இளவறுப்பாக வறுத்து சூரணித்துக் காலையில் மட்டும் 5 கிராம் சூரணத்தை எருமைத் தயிரில் கொடுத்து வர வேண்டும்.

மருந்து 2

மாலையில் மாசிக்காயை பொடி  செய்து நெய்யில் வறுத்துத் தூள் செய்து 5 முதல் 10 அரிசி எடை தேனில் குழப்பிக் கொடுக்க வேண்டும்.

மருந்து 3

சீரகம் – 50 கிராம்
கொட்டைக்கரந்தை – 50 கிராம்
கடுக்காய்ப்பூ – 50 கிராம்

ஒன்று சேர்த்து துளசி சாற்றில் மைபோல் அரைத்து கால் ரூபாய் அளவு வில்லைகளாகத் தட்டி, பசு நெய்யில் வறுத்து சீசாவில் பத்திரப்படுத்தவும். காலை, மாலை ஒரு வில்லை வீதம் தேனில் பொடித்துக் குழப்பிக் கொடுக்க வேண்டும்.

மருந்து 4

மாதுளம் பிஞ்சு – 20 கிராம்
கீழக்காய்நெல்லி வேர் – 20 கிராம்
கொத்தமல்லி – 20 கிராம்
சீரகம் – 20 கிராம்
சுக்கு – 10 கிராம்

ஒன்று சேர்த்து துளசிச் சாறு அல்லது சுடு தண்ணீர் விட்டு அரைத்துக் காலை, மாலை கழற்சிக் காயளவு கொடுத்து வர வேண்டும்.

ஆகாரம் காரமே கூடாது. தயிர், மோர் நிறைய சேர்க்கலாம்.

 

Show Buttons
Hide Buttons