குழந்தைக்கு தொடரும் அதிக உஷ்ண சம்பந்தமான நோய்களில் கணையும் ஒன்று. சூடு அதிகரிக்கக் கணைச்சூடு அதிகமாகும். குழந்தை புறங்கையை முகத்தில் தேய்த்துக் கொண்டு அழ ஆரம்பிக்கும். சுரம், தொண்டைக்கம்மல், வறட்டு இருமல் இருக்கும். முகம் கண கணப்பாக, சுவாச கஷ்டமும் இருக்கும். மூச்சு விடும் போது சத்தம் உண்டாகும். அதிகமான சிரமத்தின் பேரில் இருமி கொஞ்சம் சளி இருக்கும். பகலில் இருப்பதை விட இரவில் அதிகமாக இருக்கும். நாடி நடைமெலிந்து, முகம் வெளித்து உதடுகள் நீல நிறமாக மாறிவிடும்.
குழந்தைகளின் நாக்குத் தண்டுகளிலும், தொண்டையின் உட்புற சிறு நாளங்களில் உள்ள இளஞ் சவ்வுகளின் வீக்கத்தினாலும், அவைகளில் இயற்கையாக உண்டாகும் நீர்ப்பெருக்கத்தினாலும் இந்த நோய் ஏற்படுகிறது.
குழந்தைகள் ஈரக்காலுடன் திரிவதனாலும், தொண்டை வீக்கம், மூக்கில் சதை வளர்ச்சி முதலியவைகளினாலும் கணை ரோகம் குழந்தைகளைத் தாக்குகிறது.இது 3 வயது முதல் 7 வயது முடிய வரும்.