குழந்தைக்கு ஆகாரம்

குழந்தைக்கு ஆகார விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தாய்ப்பால் நிறுத்திய பின்பும் இரண்டு வருடங்களுக்கு கஞ்சி ஆகாரங்களே மிகவும் உகந்தது.

 

அரிசிக் கஞ்சி

புழுங்கல் அரிசியை ஒரு லிட்டர் நீரில் போட்டு ஊற வைத்து பின்பு வெயிலில் உலர்த்தி இரண்டொன்றாக உடைத்துத் தண்ணீர் விட்டரைத்த 15 கிராம் ஓமத்தில் போட்டுப் பிசறிக் காய வைக்க வேண்டும். பின்பு சட்டியில் கொட்டி பொன்னிறமாக வறுத்து, நன்றாக தேய்த்து ஊதி, ஓமத்தைப் போக்கிவிட்டு மாவாக திரித்து சீசாவில் பத்திரப்படுத்தவும்.

வேண்டும்போது கொஞ்சம் மாவு போட்டுக் கஞ்சிப் பதமாகக் காய்ச்சி (பாலும், சீனியும்)கலந்து கொடுக்கலாம்.

 

பார்லிக் கஞ்சி

பார்லி அரிசியை இளவருப்பாக வறுத்து ஒன்றிரண்டாக உடைத்ததில் இரண்டு தேக்கரண்டி அரை லிட்டர் நீரில் போட்டு, அரைக்கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி, தண்ணீரை மட்டும் கொடுக்கலாம். சீனி,பால் சேர்த்தும் கொடுக்கலாம்.

 

ஜவ்வரிசிக் கஞ்சி

ஜவ்வரிசி இரண்டு தேக்கரண்டி, அரைக்கால் லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக வேக வைத்து வடிகட்டிய தண்ணீருடன் பால், சீனி சேர்த்துக் கொடுக்கலாம்.

 

அரோரூட் கஞ்சி

அரோரூட் மாவை வேண்டி அளவு குளிர்ந்த நீரில் கரைத்துப் பிறகு தண்ணீர் விட்டுக் கட்டிவிடாமல் கிண்டி கஞ்சி பதத்தில் இறக்கி சீனி போட்டுக் கொடுக்க வேண்டும். கெட்டியாக இல்லாமல் இந்தக் கஞ்சி தண்ணீர் பதத்தில் இருக்க வேண்டும்.

 

குழந்தைக்கு சுரம், அஜீரணம், வயிற்ரோட்டம், மாந்தம் முதலியவற்றில் கஞ்சி ஆகாரம் தான் கொடுக்க வேண்டும். குழந்தை (தாய்ப்பால் குடித்து வரும்போது) நோய்க்கு ஆளாகுமேயானால்
தாயாரும் பத்தியமாக உணவு உட்கொள்ள வேண்டும்.

Show Buttons
Hide Buttons