வீட்டில் சமையலறைக்கு சென்று சர்க்கரை டப்பாவை திறந்தால் எறும்புகளாக உள்ளதா? மேலும் வீட்டின் மூலைகளில் எறும்புகள் ஓட்டை போட்டு தங்கியுள்ளதா? இவற்ற அழிப்பதற்காக கடைகளில் சென்று மருந்துகள் கலந்த சாக்பீஸ் பயன்படுத்தியிருப்பீர்கள். ஆனால் வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால், இந்த சாக்பீஸ்களைப் பயன்படுத்த முடியாது. ஆனால் இந்த எறும்புகளை வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே போக்கலாம். மேலும் இந்த இயற்கைப் பொருட்கள் அனைத்தும் எந்த ஒரு தீங்கையும் ஏற்படுத்தாதவை. அது என்ன பொருட்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? அப்படியெனில் இப்போது எறும்புகளின் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயற்கை பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!
ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் நீரை சரிசமமாக கலந்து, அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, எறும்புகள் மொய்க்கும் இடத்தில் தெளித்தால், எறும்புகள் அழிந்துவிடும்.
மசாலாப் பொருட்கள்
மசாலாப் பொருட்களான மிளகு தூள், மஞ்சள் தூள், பட்டைத் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை எறும்புகள் வரும் இடத்தில் தெளித்தால், எறும்புகள் வருவதைத் தடுக்கலாம்.
வெள்ளரிக்காய்
எறும்புகளை கொல்வதற்கு உதவும் பொருட்களில் ஒன்று தான் வெள்ளரிக்காய். அதற்கு வெள்ளரிக்காயை எறும்புகள் வரும் இடத்தில் வைத்தால், எறும்புகள் வராமல் தடுக்கலாம்.
புதினா
புதினாவை உலர்த்தி, அதனை பொடி செய்து, அவற்றை எறும்புகள் வரும் இடங்களான ஜன்னல் கதவுகள் மற்றும் வீட்டின் மூலைகளில் உள்ள ஓட்டைகளில் தெளித்தால், எறும்புகள் வராமல் இருக்கும். பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை பேக்கிங் சோடாவுடன் சரிசமமான அளவில் சர்க்கரை சேர்த்து கலந்து, அதனை எறும்புகள் வரும் இடத்தில் தூவினால், எறும்புகள் அவற்றை சாப்பிட்டு, இறந்துவிடும்.
டால்கம் பவுடர்
இது மிகவும் சிறப்பான ஒரு எறும்புக் கொல்லிப் பொருள். அதற்கு எறும்புகள் உள்ள இடத்தில் டால்கம் பவுடரை தூவி விட வேண்டும்.
கிராம்பு
சர்க்கரை டப்பாவில் 1-2 கிராம்புகளை போட்டு வைத்தால், எறும்புகள் சர்க்கரை டப்பாவில் வராமல் இருக்கும்.
பூண்டு
பூண்டுகளை தட்டி, அதனை எறும்புகள் உள்ள இடத்தில் வைத்தால், நொடியில் எறும்புகள் அனைத்தும் மாயமாய் மறைந்துவிடும்.
எலுமிச்சை சாறு
எறும்புகள் மொய்க்கும் இடத்தில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றினால், இனிமேல் எறும்புகள் வராமல் இருக்கும். அதிலும் வீட்டை மாப் கொண்டு துடைக்கும் போது, எலுமிச்சை சாறு கலந்த நீரில் நனைத்து துடைத்தால், எறும்புகள் வருவதைத் தடுக்கலாம்.
போராக்ஸ்
போராக்ஸ் பவுடரை எறும்புகள் உள்ள இடத்தில் தூவியோ அல்லது சர்க்கரை நீரில் கலந்தோ தெளித்தால், எறும்புகளின் தொல்லையில் இருந்து விடுதலைக் கிடைக்கும்.