காலையிலோ, மாலையிலோ சூரியனைப் பார்த்தவாறு சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. இவ்வாறு சூரியனைப் பார்த்து சூரிய நமஸ்காரம் செய்யும் சாதகாரின் உடல் மேல் விழும் ஒளிக்கதிர்கள், வியர்வையோடு வெளிப்படும் நச்ப் பொருட்களை உறிஞ்சிக்கொள்கின்றன. தூய்மையான இரத்தவோட்டம் ஏற்படுகிறது. செல்களுக்கும் உயிரை வழங்குகின்றன. இது சூரியனால் மட்டுமே முடியும். ஆகையால் சூரிய நமஸ்காரம் ஒரு வரப்பிரசாதமாகும்.
முதுகெலும்பிற்குப் பன்னிரெண்டு நிலைகள் உள்ளன. சூரிய நமஸ்கார செய்முறைகளும் பன்னிரெண்டு நிலைகள் உடையவை. ஒவ்வொரு செய்முறையும் தண்டுவடத்திலுள்ள எலும்புகளுக்கு வெவ்வேறு அசைவுகளைக் கொடுக்கின்றன.
சூரிய நமஸ்கார செயல்முறைகள்:
1. கால்கள் இரண்டையும் ஒன்று சேர்த்து நேராக நிமிர்ந்து நிற்கவும். சூரியனைப் பார்க்கவும். உள்ளங்கைகளை ஒன்றோடு ஒன்று சேர்த்து கட்டைப் பெருவிரல்கள் இரண்டையும் நெஞ்சின் மத்தியில் வணங்குவது போன்று வைக்கவும். ‘ஓம் ஹ்ராம் மித்ராய நமஹ’ என உச்சரிக்கவும்.
2. மெதுவாக உள்மூச்சு வாங்கவும். கைகளிரண்டையும் நேராக நிமிர்த்தி தலைக்கு மேல் தூக்கவும். பின்புறம் வளையவும். ‘ஓம் ஹ்ரிம் ரவயே நமஹ’ என உச்சரிக்கவும்.
3. மெதுவாக மூச்சை வெளியே விடவும். உள்ளங்கைகள் பாதங்களுக்கு இணையாக நிலத்தைத் தொடும் வரை மெதுவாக முன்புறம் வளையவும். முழங்கால்களைத் தலையால் தொடவும். கால்கள் வளையாமல் நிமிர்ந்தவாறு இருக்க வேண்டும். ‘ஓம் ஹ்ரூம் சூர்யாய நமஹ’ என உச்சரிக்கவும்
4.மெதுவாக உள் மூச்சை எடுத்துக்கொண்டே வலதுகாலை பின்புறம் நீட்டவும். அப்போது கைகளையும் இடது காலையும் அசைக்காமல் உறுதியாக நிலத்தில் பதித்து வைக்கவும். தலையை மேலே தூக்கி முன்புறம் பார்க்கவும். இடது முழங்கால் கைகள் இரண்டிற்கும் இடையில் இருக்க வேண்டும். ‘ஓம் ஹ்ரைம் பானவே நமஹ’ என உச்சரிக்கவும்.
5.மூச்சை நிறுத்தவும். இப்போது இடது காலையும் பின்புறம் நீட்டவும். இப்போது வலது பாதமும், இடது பாதமும் இணையாக நேராக இருக்க வேண்டும். கைகளும் கால் பெருவிரல்களும் உடல் பாரத்தைத் தாங்கிக் கொள்கின்றன. ‘ஓம் ஹ்ரெளம் ககாய நமஹ’ என உச்சரிக்கவும்.
6.மூச்சை வெளியே விடவும். மெதுவாக உடலை கீழே இறக்கவும். இரண்டு கால் பெருவிரல்கள், இரண்டு முழங்கால்கள், இரண்டு உள்ளங்கைகள், மார்பு, நெற்றி ஆகிய எட்டு உறுப்புக்கள் மட்டும் நிலத்தைத் தொட வேண்டும். அடி வயிறு சிறிது தூக்கியபடி இருக்க வேண்டும். ‘ஓம் ஹ்ராம் ஹிரண்ய கர்ப்பாய நமஹ’ என உச்சரிக்கவும்.
7.மூச்சை உள்ளிழுத்தவாறே மெதுவாகத் தலையை மேலே தூக்கவும். முடிந்த அளவுக்கு முதுகெலும்பைப் பின்பக்கம் வளைக்கவும். ‘ஓம் ஹ்ராம் ஹிரண்ய கர்ப்பாய நமஹ’ என உச்சரிக்கவும்.
8.மூச்சை வெளியே விட்டவாறே மெதுவாகத் தலையைத் தாழ்த்தி உடலை மேலே தூக்கவும். பாதங்களும், உள்ளங்கைகளும் நிலத்தில் படிந்திருக்க வேண்டும். ‘ஓம் ஹ்ரிம் மரிசயே நமஹ’ என உச்சரிக்கவும்.
9.மூச்சை உள்ளிழுத்தவாறே இடது காலை இடது கை அருகில் கொண்டு வரவும். வலது காலும், வலது முழங்காலும் நிலத்தைத் தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். முன்பக்கம் பார்க்கவும். ‘ஓம் ஹ்ரூம் ஆதித்யாய நமஹ’ என உச்சரிக்கவும்.
10.மூச்சை வெளியே விட்டவாறே உள்ளங்கைகள் பாதங்களுக்கு இணையாக நிலத்தைத தொடும் வரை மெதுவாக முன்புறம் குனிந்து வளையவும். முழங்கால்களைத் தலையால் தொடவும். கால்கள் வளையாமல் நிமிர்ந்து இருக்க வேண்டும். ‘ஓம் ஹ்ரைம் ஸவித்ரே நமஹ’ என உச்சரிக்கவும்.
11.மூச்சை உள்ளிழுத்தவாறே இரண்டு கைகளையும் நேரே தலைக்கு மேலே தூக்கி பின்புறம் வளையவும். ‘ஓம் ஹ்ரெளம் அர்க்காய நமஹ’ என உச்சரிக்கவும்.
12.முதல் நிலை மாதிரி நிமிர்ந்து நேராக நின்று சூரியனைப் பார்த்து உள்ளங்கைகளை ஒன்றோடு ஒன்று சேர்த்து கட்டைப் பெருவிரல்கள் இரண்டையும் வணக்கம் செய்வது போல் நெஞ்சின் மத்தியில் வைக்கவும். ‘ஓம் ஹ்ரஹ பாஸ்கராய நமஹ’என உச்சரிக்கவும்.
இரண்டாவது நமஸ்காரத்தை இதுபோல் செய்யவும். நிலை எண் 4, 9 களில் மட்டும் இடது காலுக்குப் பதில் வலது காலை மாற்றிச் செய்யவும். இவ்வாறு கால்களை மாற்றி மாற்றி குறைந்தது ஐந்து நமஸ்காரங்கள் ஒரு வேளையில் செய்யலாம்.